தமிழ்நாடு மாநிலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி தான் ஊத்தங்கரை. 

இது மாவட்டத் தலைமையகமான கிருஷ்ணகிரியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

ஊத்தங்கரையில் கிடைத்திருக்கும் 13-14-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் “ஆடையூர் நாட்டு எயில் நாட்டு தென்பற்று ஊர்கரை மேனோக்கிய மரமும்”

என்ற வரியில் இந்த ஊரின் பெயர் குறிக்கபட்டுள்ளது. கல்வெட்டில் உள்ள குறிப்புகளின் படி இந்த ஊர் அக்காலத்தில் ஊர்கரை என்று அழைக்கப்பட்டது தெரிய வருகிறது. காலப்போக்கில் இது ஊத்தங்கரை என்று மருவியுள்ளது.

ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடிய  ஆற்றின் கரைகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊற்றின்கரை என்று அழைக்கப்பட்டு, காலத்தின் சுழற்சியால் ஊத்தங்கரை என்று அழைப்பதாக இன்னொரு பெயர்காரணமும் சொல்லப்படுகிறது. 

இப்படி வளம் பொதிந்த ஊத்தங்கரை சங்க காலத்தில் அதியமன்னர்கள் ஆட்சி செய்த தகடூர் நாட்டில் இடம் பெற்றிருந்தது.

அன்றைய காலகட்டத்தில் ‘கோவூர்நாடு’ என்ற பெயரில் ஊத்தங்கரை அழைக்கப்பட்டதாக வரலாற்று குறிப்புகளில் இடம் பெற்றுள்ளது. இந்த கோவூர் நாடானது பின்னர் பல்லவர்கள், கங்காவம்சத்தினர், நுளம்பர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசர்கள், பிஜப்பூர்சுல்தான்கள், மைசூர் உடையார்கள் மற்றும் மதுரை நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவும் இருந்துள்ளது.

முதலாம் மைசூர் போரின் போது, ஆங்கிலேயப்படைகள் கிருஷ்ணகிரி வழியாக காவேரிப்பட்டணம் சென்று  ஹைதர் அலியின் படைகளுடன் போரிட்டது. இதில் அவரது கட்டுப்பாட்டில் இருந்த சேலம், கர்நாடக பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதன் தொடர்ச்சியாக ‘ஸ்ரீரங்கபட்டிண உடன்படிக்கை’ ஏற்பட்டது.

இதன்படி 12 கோட்டை தலங்களை உள்ளடக்கிய பாராமஹால் ஆங்கிலேயர் வசம்வந்தது. 1792ம் ஆண்டு ராபார்ட் கிளைவ் மதராஸ் மாகாணத்தின் கவர்னராக பொறுப்பு வகித்தார். அப்போது பாராமஹாலின் தலைநகரமாக விளங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ஊத்தங்கரை ஜில்லா பேசப்பட்டது.

ஊத்தங்கரை சோழ சாம்ராஜ்யத்தில் இருந்து நீண்ட வரலாறு கொண்டது. சங்க இலக்கியங்கள் உட்பட பல பண்டைய தமிழ் நூல்களில் இந்த நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஆம் நூற்றாண்டில், சோழ மன்னன் முதலாம் இராஜராஜன், ஊத்தங்கரைப் பெருமாள் கோயிலைக் கட்டினார், இது விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயிலாகும். ஊத்தங்கரையில்  உள்ள கோவில்களில் முக்கியமான கோவில்.

புராதனச்சிறப்புகளோடு வரலாற்று  பெருமைகள் கொண்ட ஊராக ஊத்தங்கரை திகழ்கிறது. 

பலதரப்பட்ட உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதியாக திகழ்ந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக கல்வியில் கவனம் ஈர்க்கும் பகுதியாக ஊத்தங்கரை திகழ்கிறது. பிரசித்தி பெற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியாளர்களின் கவனம் ஈர்த்து நிற்கிறது.

அதே நேரத்தில் அரசு பள்ளிகளும் களத்தில் நின்று தேர்ச்சி விகிதத்தில் ஆண்டு தோறும் புதிய சாதனை படைத்து வருவது  பெருமைக்குரியது. நகரத்தின் சாயல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும் கிராமங்கள் சூழ்ந்த ஊராகவே ஊத்தங்கரை உள்ளது. இதை கவனத்தில் கொண்டு மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தினால் ஊத்தங்கரையின் கொடி மேலும் உயரப்பறக்கும் என்பது  ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கை.